ராமேஸ்வரம்: மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சிமடம், மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ கடந்த மார்ச் 6ஆம் தேதி திங்கட்கிழமை இரவு சக மீனவர்களுடன் தனுஷ்கோடி, ஆதம்பாலம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பிரிட்ஜோ(22) கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற ஜெரோன்(27) உட்பட சில மீனவர்கள் காயமடைந்தனர். அவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் பிரிட்ஜோவின் கழுத்தில் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, துப்பாக்கி குண்டு தனியார் குற்றவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, உயிரிழந்த பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும், சிறையில் அடைத்த தமிழர்களையும் விடுவிக்கக் கோரி போராட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரில் வரும்வரை பிரிட்ஜோவின் உடலை வாங்கப்போவதில்லை எனக் கூறி உறவினர்களும், பொதுமக்களும் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற தர்ணா போராட்டத்தை தொடர்ந்து, நேற்று மூன்றாவது நாளாக பிரிட்ஜோவுக்கு மீனவர்கள் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும். இறந்த மீனவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடாக இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கூடங்குளம் போராட்டக் குழு தலைவர் சுப.உதயகுமார், தேசிய சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்த பாத்திமா பாபு ஆகியோர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உடலை வாங்குமாறு வலியுறுத்தியும் குடும்பத்தினரும், பொதுமக்களும் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை முன்பு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நான்காவது நாளான இன்று பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நெல்லை மாவட்டத்தில் 9 கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து இன்று ஒருநாள் கடலுக்கு செல்லப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisements