புதுடெல்லி: இதய சிகிச்சையில், மாரடைப்பு மீண்டும் வராமல் தடுக்க தமனியில் பொருத்தப்படும் ஸ்டென்ட் கருவியின் விலையை அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக வசூல் செய்துள்ளதாக சுமார் 30 தனியார் மருத்துவமனைகள் மீது தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்திடம் (என்பிபிஏ) புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதய நோயாளிகளுக்கு ரத்தக்குழாயில் உள்ள அடைப்பை நீக்குவதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படும் அதற்கு ‘ஸ்டென்ட்’ என்னும் கருவி பயன்படுத்தப்படுகிறது.

கடந்த மாதம் பிப்ரவரி 13ஆம் தேதி, ’ஸ்டென்ட்’ விலையை என்பிபிஏ 85% குறைத்து நிர்ணயித்தது. அதன்படி, 40,000 ரூபாய் முதல் 1.98 லட்சம் ரூபாய் வரை இருந்த, தானாக கரைந்துவிடும் மருந்து வகை ஸ்டென்ட் விலை 29,600 ரூபாயாக குறைத்தது. அதேபோல், 30,000 முதல் 75,000 ரூபாய் வரை இருந்த உலோகத்தால் ஆன ஸ்டென்ட் விலை 7,600 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.

அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீதும், ஸ்டாக் இல்லை என தெரிவிப்பவர்கள் மீதும் என்பிபிஏ-விடம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதுடெல்லி, ஹரியானா, உ.பி., உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ம.பி. ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவமனைகளும் பல பிரபலமான மருத்துவமனைகளும் ’ஸ்டென்ட்’ கருவிக்கு அதிக விலை வாங்கியதாக என்பிபிஏ-விடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பெயர் மற்றும் முகவரி என்பிபிஏ-வின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் அளித்த ரசீதுகளுக்காக என்பிபிஏ காத்திருக்கிறது. மேலும் சில மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்டென்ட்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஸ்டென்ட்களின் விலை அவற்றின் வகைக்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. சில இதய அறுவை சிகிச்சையில் அவற்றின் விலை ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், 2013ஆம் ஆண்டு,டிசம்பர் அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் ஸ்டென்ட்களும் சேர்க்கப்பட்டு அதன் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்தியாவில் மருத்துவக் கருவிகள் விற்பனையில் ஸ்டென்ட் கருவி மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.2,200 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements