புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி நெடுவாசலில் 22 நாட்களாக நடந்துவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்துவதை எதிர்த்து நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் கடந்த 22 நாட்களாக போராட்டம் நடந்துவந்தது. போராட்டக் குழுவினருடன் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. போராட்டக்குழுவின் பிரதிநிதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தநிலையில், நெடுவாசலில் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டக் குழுவினர் மத்தியில் பேசிய அவர், மக்கள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு திணிக்காது என்றும் உறுதியளித்தார். அதேபோல, போராட்டக்குழுவினரும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி உட்பட எந்த அனுமதியும் மாநில அரசு சார்பில் வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்தார். மத்திய, மாநில அரசுகளின் உறுதியை ஏற்று போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர். கோரிக்கை முழுமையாக ஏற்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisements