தமிழகம்: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்களுக்கு வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவை சுகாதாரத்துறை கட்டாயமாக்கியுள்ளது.

மருத்துவர்களின் தாமதமான வருகையால், நோயாளிகள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அதைத் தவிர்க்கவும் வருகைப் பதிவேட்டில் போலி கையெழுத்திடுவது போன்ற பிரச்னைகளை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கு, கடந்த மாதம் ஜனவரி 25ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், நான்கு மாதங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் வேலைசெய்யும் மருத்துவர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை கட்டாயமாகிறது என சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து டீன் ஒருவர், ‘கடந்த 2012ஆம் ஆண்டு, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் கொண்டுவந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவு திட்டத்தை, மருத்துவ சங்கங்கள் தங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி முடக்கின. இதனால் வாங்கப்பட்ட பயோமெட்ரிக் இயந்திரங்களில் பெரும்பாலான இயந்திரங்கள் வீணாகின. தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், மருத்துவ சங்கப் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவிக்க தயங்குகின்றனர். பயோமெட்ரிக் வருகைப் பதிவை மறுக்கும் மருத்துவர்கள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Advertisements