சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டுமென நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பிக்கள் கோரிக்கை எழுப்பினர். இதற்கு அனுமதி கிடைக்காமல் நடைபெற்ற அமளியால் மக்களவை ஒத்திவைப்பு.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று மக்களவை கூடியதும் கேள்வி நேரம் துவங்கியது. இதில் எழுந்த நின்ற பன்னீர் ஆதரவு அதிமுக எம்பிக்கள், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதன் மீது சிபிஐ விசாரணை வேண்டி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும் கோரினர். இதற்கு முன் அனுமதி பெறவில்லை என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுப்பு தெரிவித்தார். எனினும், சபாநாயகர் இருக்கை நோக்கி வந்த எம்பிக்கள் சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோஷம் எழுப்பினர். அவர்கள் கைகளில் ஜெயலலிதா படத்துடன் சிறிய பதாகைகளும் இருந்தன.

இவர்கள் கோரிக்கையை விரும்பாத மற்ற அதிமுக எம்பிக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக அவர்களில் பலர் அவையில் இருந்து வெளியில் வந்து விட்டனர். எனினும், பத்து எம்பிக்கள் போட்ட கோஷத்தால், அவையில் சில நிமிடங்கள் அமளி நிலவியது. இதன் காரணமாக, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 10 நிமிடங்களுக்கு அவையை ஒத்தி வைத்தார். பிறகு மீண்டும் அவை கூடிய பிறகும் அந்த எம்பிக்கள் அதே கோஷங்களை எழுப்பி அனுமதி கேட்டனர். இதற்கும் சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

இதற்கிடையே, மாநிலங்களவையிலும் இந்த பிரச்சனை கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்டது. இங்கு அதை பன்னீர் ஆதரவு அதிமுக எம்பியான டாக்டர்.வி.மைத்ரேயன் மற்றும் டாக்டர்.ஆர்.லஷ்மணன் ஆகியோர் சபாநாயகர் முன் வந்து எழுப்பினர். அப்போது மைத்ரேயன், ‘மிகுந்த வெறுப்பு மற்றும் துயரத்துடன் முன்னாள் முதல் அமைச்சர் மரணம் மீது மத்திய அரசின் விசாரணை நடத்தப்பட வேண்டும். இது சிபிஐ அல்லது மத்திய விசாரணை அமைப்புகளால் நடத்தப்பட வேண்டும். எனத் தெரிவித்தார்.

இதற்கு மாநிலங்களவையில் அமர்ந்திருந்த மற்ற அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் சிறிது நேரம் அமளி நிலவியது. இதில் குறிப்பாக விஜிலா சத்யாணந்த் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டார். இதற்காக மாநிலங்களவையில் இருந்த துணை சபாநாயகர் பி.ஜே.குரியன் எச்சரித்து அமர வைத்தார். அதேசமயம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பியான எல்.சசிகலா புஷ்பாவும் அதே கோரிக்கையை எழுப்பினார். இவரும் துணை சபாநாயகர் பி.ஜே.குரியன் முன் வந்து நின்று கோஷமிட்டார். இவர்கள் மூவரின் கைகளிலும் ஜெயலலிதா படத்துடன் கூடிய ஒரே மாதிரியான பதாகைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements