ராமேஸ்வரம்: கடந்த 6-ம் தேதி இரவு ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூட நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில், ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 22 வயது மீனவர் பிரிட்ஜோ இறந்தார். மேலும், சில மீனவர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து, தங்கச்சிமடத்தில் மீனவர் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்டு போராட்டத்தைத் தொடங்கினர் அப்பகுதி மீனவர்கள். இந்தப் போராட்டம் இன்று 5-வது நாளாக தொடர்கிறது. ‘மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேரில் வந்து கோரிக்கையை கேட்டறிய வேண்டும்’ என்ற கோரிக்கைகளுடன் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே, பல அரசியல் தலைவர்களும் மீனவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தங்கச்சிமடத்துக்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்

இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின்னர் ஓ.பன்னீர்செல்வம், ‘மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமரிடம் நேரில் வலியுறுத்துவேன். இறந்த மீனவரின் குடும்பத்தில் உள்ளோரின் கல்வி செலவினை அ.தி.மு.க ஏற்கும். மீனவரின் குடும்பத்தை பாதுகாப்போம்’ என்று கூறினார்.

Advertisements