ராமநாதபுரம்: இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 85 பேரை விடுதலை செய்து ஊர்காவல்துறை, மன்னார் மற்றும் திரிகோணமலை நீதிமன்றங்கள் நேற்று உத்தரவிட்டன. ஆனால், தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த ஜனவரி 4-ம் தேதியில் இருந்து மார்ச் 4 வரையிலான காலகட்டத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை , நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 85 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 85 பேரும் வவுனியா, யாழ்ப்பாணம், திரிகோணமலை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி இரவு கச்சத் தீவு அருகே ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற பிரிட்ஜோ(21) என்ற மீனவர் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். காயமடைந்த மீனவர் ஜெரோன்(27) சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோ உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, கடந்த 8-ம் தேதி கொழும்பில் இந்திய- இலங்கை உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா ஆகியோர் தலைமையில் இரு நாட்டு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. இதில், இலங்கை சிறைகளில் உள்ள 85 தமிழக மீனவர்களையும், இந்திய சிறைகளில் உள்ள 19 இலங்கை மீனவர்களையும் பரஸ்பரம் விடுதலை செய்வதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள 85 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு நேற்று பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 53 தமிழக மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்திலும், வவுனியா சிறையில் இருந்த 24 மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்திலும், திரிகோணமலை சிறையில் இருந்த 8 மீனவர்கள் திரிகோணமலை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். 85 தமிழக மீனவர்களும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இலங்கை அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை.

Advertisements