இங்கிலாந்து: இங்கிலாந்தில் உள்ள சிறந்த 20 கால்பந்து கிளப்கள் மோதும், பிரிமியர் லீக் தொடர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 38 வாரங்கள் நடக்கும் இந்த தொடர் தற்போது 29-வது வாரத்தை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் ஆட்டங்கள் உண்மையிலேயே சூடு பிடிக்க தொடங்கி உள்ளன. இந்த வாரம் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடைபெற்றதால் இங்கு பிரிமியர் லீக்கில் குறைவான ஆட்டங்களே அட்டவணையில் உள்ளன.

இந்த வார ஆட்டங்களை பார்ப்பதற்கு முன், புள்ளிகள் பட்டியலில் அணிகளின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். செல்சி கிளப் 66 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள டோதன்ஹாம் அணியை விட செல்சி பத்து புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் முதலிடத்தில் ஜம்மென அமர்ந்திருக்கிறது. ஆனால், அதன்பின் ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் ஆறு அணிகள் அடுத்தடுத்த இடங்களில் அடித்துக் கொள்கின்றன.

டோத்தன்ஹாம், மான்செஸ்டர் சிட்டி அணிகள் 56 புள்ளிகளுடன் முறையே இரண்டு மூன்றாம் இடங்களில் உள்ளன. லிவர்பூல் அணி 52 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், ஆர்சனல் மற்றும் யுனைடெட் அணிகள் 50, 49 புள்ளிகளுடன் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. ஹல் சிட்டி மற்றும் சண்டர்லேண்ட் புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. இவ்விரு அணிகளும் பிரீமியர் லீக்கில் இருந்து வெளியேற்றப்படுவதை தடுக்க வரும் வாரங்களில் மிகக் கடுமையாகப் போராட வேண்டியது இருக்கும்.

வியாழக்கிழமை நடந்த மோதலில் மான்சஸ்டர் சிட்டி, ஸ்டோக் சிட்டி அணிகளுக்கு இடையேயான போட்டி கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் இந்த முடிவு புள்ளிப் பட்டியலில் பெரிய வித்தியாசம் ஏற்படுத்தவில்லை. மான்சஸ்டர் சிட்டி அணிக்கு ஒரு புள்ளி கிடைத்தது. இதனால் அந்த கிளப் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.

இன்று நடக்கும் போட்டியில் ஹல் சிட்டி அணியை எதிர்த்து ஸ்வான்ஸீ சிட்டி அணிகள் மோதுகின்றன. ஹல் சிட்டி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.. இனி வரும் ஒவ்வொரு போட்டியுமே அவர்களுக்கு மிகவும் முக்கியமானதுதான். அவர்கள் வெற்றிபெறவில்லை எனில், வெளியேற்றப் பட்டு விடுவார்கள்.

சனிக்கிழமை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் ஹாம் அணியை எதிர்க்கிறது போர்ன்மவுத் அணி. இரு அணிகளும் முறையே 11, 14வது இடத்தில் உள்ளதால் இந்த ஆட்டத்தில் விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மற்றொரு ஆட்டத்தில் சம பலம் வாய்ந்த ஈவர்டோன் மற்றும் வெஸ்ட் பிரோம்விச் அணிகள் விளையாடுகின்றன. இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களில் உள்ளதால் இது இந்த வாரம் மிகவும் முக்கியமான ஆட்டமாக கருதப்படுகிறது.

இந்த ஆட்டங்களைத் தவிர, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் லிவர்பூல், பர்ண்லி அணியை எதிர்த்து விளையாடுகிறது. லிவர்பூல் அணி சமீபமாக தங்களுடைய வெளியூர் ஆட்டங்களில் தொடர்ச்சியாக நான்கு முறை தோல்வியடைந்திருப்பதால் அதன் பயிற்சியாளர் ஜர்கன் கிளாப் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது, ‘‘நட்சத்திர வீரர்கள் காயமடைந்து வருவது எங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறது. இதனால் எங்கள் அணியால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் உள்ளது’’ என கூறியுள்ள அவர் பர்ண்லி ஒரு ஷ்பெஷலான அணி எனவும் குறிப்பிட்டு உள்ளார். லிவர்பூல் அணி அடுத்த வருடம் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெறுவதற்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது முக்கியமானதாகும்.

Advertisements