இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையை கண்டித்து தங்கச்சிமடத்தில் நேற்று 4-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

கச்சத்தீவு அருகே திங்கள் கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ(21) உயிரிழந்தார். காய மடைந்த மீனவர் ஜெரோன்(27), ராமநாதபுரம் தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கிறார்.

மீனவர் பிரிட்ஜோ படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, ராமே சுவரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக நேற்று போராட்டம் தொடர்ந்தது. இந்தப் போராட்டத்தில் ராமநாத புரம், புதுக்கோட்டை, நாகப்பட்டி னம், தஞ்சாவூர், திருவாரூர், காரைக் கால் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கலந்துகொண் டனர்.

மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் இயக்கத்தினர் தங்கச்சிமடத்துக்கு தினந்தோறும் வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூ. முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்கச்சிமடத்தில் நேற்று மீனவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். கடந்த 2 ஆண்டு களாக இலங்கை கடற்படையின ரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும்.

மீனவர்கள் மீது இனிமேல் தாக்குதல் நடை பெறாது என தங்கச்சிமடத்துக்கு வந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் உறுதி அளிக்க வேண்டும். இக் கோரிக்கைகளை நிறைவேற்றி னால்தான் மீனவர் பிரிட்ஜோவின் உடலை பெறுவோம். இல்லாவிட் டால், போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என மீனவ சங்கங்கள் அறிவித்துள்ளன.

Advertisements