திண்டுக்கல்: அதிகத் தண்ணீர் தேவைப்படாத பயிர்களைத் தேர்வுசெய்து சாகுபடி செய்தால் மட்டுமே, விவசாயம் வில்லங்கமில்லாமல் இருக்கும். அந்த வகையில் குறைந்த தண்ணீரில், வறட்சியைத் தாங்கி வளரும் கொய்யா, சமீபகாலமாக விவசாயிகளின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. கொய்யாவுக்குக் கிடைக்கும் விலை காரணமாக கொய்யா சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகில் இருக்கும் ஆயக்குடி கிராமம், கொய்யா சாகுபடிக்குப் பிரபலமானது. இதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் விளையும் கொய்யாவுக்குத் தனிச் சிறப்பு இருக்கிறது. தவிர, பிரத்யேக சந்தையும் இருப்பதால், ஆயக்குடி கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில், முதன்மைப் பயிராக இருக்கிறது, கொய்யா. இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாகக் கொய்யா சாகுபடியில் ஈடுபட்டு வருகிறது.

வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் கொய்யா வளரும். மழைக்காலமான ஜுன், ஜுலை ஆகிய மாதங்கள் நடவுக்கு ஏற்றவை. சாகுபடி நிலத்தை நன்றாக உழவு செய்து, வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்குச் செடி எட்டு அடி இடைவெளியில் ஓர் கன அடி அளவுக்குக் குழியெடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் குழியெடுத்தால் ஏக்கருக்கு 545 குழிகள் வரை எடுக்க முடியும். ஒவ்வொரு குழியிலும் தலா இரண்டு கிலோ தொழுவுரம், கால் கிலோ வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து இட்டு, கொய்யாச் செடியை நடவு செய்ய வேண்டும். வேப்பம்பிண்ணாக்கு, வேர் தொடர்பான நோய்களை அண்டவிடாது என்பதால் அதைச் சேர்ப்பது நல்லது.

நடவு செய்ததிலிருந்து மூன்று மாதங்கள் வரை, வேர்ப்பகுதியில் ஈரம் காயாத அளவுக்குப் பாசனம் செய்ய வேண்டும். பிறகு 15 நாள்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதுமானது. மரத்தில் காய்கள் இல்லாத சமயங்களில், 20 நாள்களுக்கு ஒருமுறை கூட பாசனம் செய்யலாம். வாய்க்கால் பாசனத்தைவிட சொட்டுநீர்ப் பாசனம்தான் சிறந்தது. மரத்தில் பிஞ்சு, காய்கள் இருக்கும்போது, 15 நாள்களுக்கு ஒருமுறை கட்டாயம் பாசனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பாசனத்தின்போதும் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை நீரில் கலந்து விட வேண்டும்.

செடிகள் ஒன்றரையடி உயரம் வந்தவுடன் முனையை வெட்டி விட வேண்டும். இப்படிச் செய்தால், செடி இரண்டு மூன்று கிளைகளாகப் பிரியும். காய்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதுபோல, குறிப்பிட்ட அளவு உயரத்துக்கு மேல் செடிகளை உயர விடாமல், ஆண்டுக்கு இரண்டு முறை கவாத்துச் செய்ய வேண்டும். நடவு செய்து ஐந்து மாதங்கள் கழித்துப் பூக்கள் எடுக்கும். அந்தப் பூக்களை உதிர்த்து விட வேண்டும். தொடர்ந்து பூக்களை உதிர்த்து விட்டால்தான் செடியின் தண்டுப்பகுதி தடிக்கும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை பூக்களை உதிர்த்து வர வேண்டும். பூக்களை உதிர்ப்பதையும் கவாத்தையும் முறையாகச் செய்து வந்தால்தான் மரங்கள் தரமானதாகப் பலமுடன் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வரும் பூக்களைப் பிஞ்சு பிடிக்க விடலாம்.

Advertisements