சென்னை: இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக தினம் ஒரு தகவலை “செந்தமிழ் சுடர்” என்ற இணையதளம் மூலம் மக்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், இன்று “VERMICOMPOST” எனப்படும் “மண்புழு உரம்” தயாரிக்கும் எளிய முறையை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்.

தேவையான பொருட்கள்:

* பண்ணை கழிவுகள் ( உதாரணமாக மாடு மற்றும் ஆடு சாணம் )

* சாணக்கரைசல் (1 பக்கெட்)

* பயித்த மாவு (2 கிலோ)

* வெள்ளக்கரைச்சல் (1 லிட்டர்)

செயல்முறை:

முதலில் மேடான நிழல் பாங்கான, மழை தண்ணீர் தேங்கி வெளியில் செல்லாத இடமாக இருத்தல் வேண்டும். ஒரு புறம் வெயில் படும் இடமாக கூட இருக்கலாம் ஆனால் பகல் வெயில் நேராக படும் இடமாக இருத்தல் கூடாது. அவ்விடத்தில், 3 அடி அகலத்தில், நீளம் நம் தேவைக்கு ஏற்றார்போலவும் பள்ளம் தோண்டி கொள்ளவும்.

. நம் தேவைக்கு ஏற்றார்போல் அமைக்கப்பட்ட பள்ளத்தில் பண்ணைக்கழிவு ( உதாரணமாக வைக்கோல், சோளத்தட்டை, மல்லாட்டை தோள்) போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். அப்பண்ணைக்கழிவுகளை ஒரு அடுக்கு அப்பள்ளத்தில் போட்டுக்கொள்ளவும். மக்கக் கூடிய எந்தவகையான பயிர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

. அடுத்ததாக மாடு, ஆடு கழிவுகளை அதன்மேல் போடவும். (அக்கழிவுகளில் கண்ணாடி, பிளாஸ்டிக் பேப்பர், பேப்பர் போன்றவை இருத்தல் கூடாது)

. மேலும் அதன்மேல் சாணக்கரைச்சலை தெளிக்கவும்.

. அடுத்ததாக பயித்த மாவு அதன்மேல் தூவவும். (நுண்ணுயிர்களை பெருக்குவதற்காக இந்த மாவு பயன் படுத்தப்படும் )

. மேலும் அதன்மேல் வெள்ளக்கரைச்சலை தெளிக்கவும்.

மேற்கண்ட படியே மீண்டும் ஒரு அடுக்கு பண்ணை கழிவு, அதன்மேல் வீட்டு விலங்கு கழிவுகள் போடவும். அதன்மேல் சாணக்கரைச்சல், பயித்தமாவு, வெள்ளக்கரைச்சல் போன்றவற்றை தெளிக்கவும்.

இவ்வாறு செய்துவிட்டு மேலே கோணி பை அல்லது வைக்கோல் போன்றவற்றை போட்டு மூடவும். தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் அதன்மேல் தண்ணீர் தெளிக்கவும். 30 நாட்கள் கழித்து அதனை கிளறிவிடவும் (நுண்ணுயிர் பெருகுவதற்காகவும், வெப்பம் குறைவதற்காகவும் இந்தமுறை பயன்படுத்தப்படுகிறது). 60 நாட்கள் கழித்து இந்த மண்புழு உரத்தினை நாம் நம் வயலுக்கு பயன்படுத்தலாம். சிறந்த இயற்கை உரமாக இந்த மண்புழு உரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ஒரு ஏக்கருக்கு நான்கு மூட்டைகள் பயன்படுத்தினால் போதுமானது.

Advertisements