அமெரிக்கா: ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்துக்காக, ஆஸ்கரில் இரண்டு பிரிவில் நாமினேஷன் ஆகியிருந்தார் ரஹ்மான். சிறந்த பாடலுக்கான விருது, சிறந்த பின்னணி இசைக்கான விருது என, இரு பிரிவுகளில் ஒரு விருது கிடைத்தால்போதும் என்று இந்திய மக்கள் வேண்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இரு விருதுகளும் ரஹ்மானுக்கே கிடைத்தன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோடாக் தியேட்டரில் நடந்த ஆஸ்கர் விழாவை, நமது மக்கள் தொலைக்காட்சியில் ஆர்வமாகப் பார்த்தபடி இருந்தார்கள். ரஹ்மானுக்கு பரிசு கிடைத்த தருணத்தை தங்களுக்கே கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இப்போது பல உலகளாவிய திரைப்படங்களுக்கும் ஆல்பங்களுக்கும் இசையமைத்து வருகிறார். போர்ச்சுக்கல் படமான ‘பீலே’ படத்துக்கு இசையமைத்ததற்காக இந்த வருடமும் சிறந்த பாடலுக்கான பிரிவில் கலந்துகொண்டிருக்கிறார். இன்னும் பல ஆஸ்கர் விருதுகளை வாங்க, அவருக்கு வரும் வருடங்களில் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் தமிழ்ப் படங்களை தவிர்த்துவிடாமல் மணிரத்னம், கெளதம் வாசுதேவ் மேனன், ஷங்கர் போன்ற இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்தபடி இருக்கிறார்.

இசையில் புதுமையை வெளிக்கொண்டுவருவதில் ஆர்வம் கொண்டவரான ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைப்படமாக வெளிக்கொண்டுவர இருக்கிறார்.

ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி ‘தி இஸ் இட்’ என்ற பெயரில் இசைத் திரைப்படமாக வெளியானது. அதைப் போன்று இந்தியாவில் முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் சமீபத்தில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை முதன்முறையாக உலகெங்கும் திரையரங்குகளில் திரையிட உள்ளார்கள்.

YM மூவீஸ் மற்றும் கிரேப் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள ‘ஒன் ஹார்ட்’ இசைத் திரைப்படம் பிப்ரவரி 5ஆம் நாள் கனடா, டோரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. ஒன் ஹார்ட் இசைப் படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ஒரு புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தியதாகவும், மிகவும் ரசித்துப் பார்த்ததாகவும்’ கூறினர். ஒன் ஹார்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இசைத் திரைப்படத்தில் அமெரிக்காவில் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையிலான இசை சுற்றுப்பயணம், இசை நிகழ்ச்சி, இசை ஒத்திகை மற்றும் பிரத்யேக பேட்டிகள் ஆகியவை இடம்பெற்றன. திரையுலகில் தனது 25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதன் நினைவாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

வெகுநாட்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசைத் துறையை சார்ந்தவர்களுக்கு உதவிட ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. ‘ஒன் ஹார்ட் மியூசிக் பவுண்டேஷன்’ எனும் தன்னார்வ அமைப்பு, இசைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு உதவி புரிய தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒன் ஹார்ட் படம் மூலம் கிடைக்கும் அனைத்து வருவாயையும் இசைத் துறையினருக்கு ‘ஒன் ஹார்ட் மியூசிக் பவுண்டேஷன்’ நிறுவனத்தின் நலத்திட்ட உதவிகள் புரிய அன்பளிப்பாக அளிக்க இருக்கிறாராம். ஜீமா (GIMA – GLOBAL INDIAN MUSIC ACADEMY AWARDS) நிறுவனம் ஒன் ஹார்ட் மியூசியன்ஸ் பவுண்டேஷனை நிர்வகித்து, நலத்திட்ட உதவிகளை முன்னின்று இயக்கவுள்ளது. உலகெங்கும் ஏப்ரல் மாதம் ஒன் ஹார்ட் இசைத் திரைப்படம் வெளியாகிறது.

Advertisements