தமிழ் நாடு : தமிழகத்தின் 2017-18ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் ஜெயக்குமாரால் இன்று காலை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை, கடன் சுமை அதிகரித்துள்ளது, விவசாயக் கடன் தள்ளுபடி இல்லை என்று பட்ஜெட் குறித்து எதிர்கட்சித் தலைவர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் (திமுக)

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சசிகலா, தினகரன் ஆகியோரின் பெயர்களை அமைச்சர் ஜெயக்குமார் கூறியது தவறான செயல். எனவே, அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் சபாநாயகர் அதற்கு மறுத்துவிட்டார். அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. ஏற்கனவே பல பட்ஜெட்டுகளில் கூறிய திட்டங்களையும், ஆளுநர் உரையில் வந்த அறிவிப்புகளையுமே மீண்டும் கூறியுள்ளனர்.

2011இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தின் கடன் மட்டுமே அதிகரித்து சுமார் 3 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. மாநிலத்தின் மொத்த வருமானத்தைவிட கடனுக்கான வட்டி அதிகமாக உள்ளது. இதனால், மிகப்பெரிய கடனாளி என்ற சாதனையை தமிழகம் படைத்துள்ளது. பட்ஜெட் உரையில் புதிய மின் திட்டங்களுக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. விவசாயக் கடன் தள்ளுபடி, 2023 தொலைதொடர்பு திட்டம் மற்றும் 110 விதிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. புதிய மொந்தையில் பழைய கள் என்பதுபோல இந்த பட்ஜெட் உள்ளது. மேலும் பட்ஜெட் தாக்கலின்போது அனைத்து அமைச்சர்களும் அவையில் இருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் 4 அமைச்சர்கள் இன்று அவைக்கு வரவில்லை, அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.

கே.ஆர்.ராமசாமி (சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்)

தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை, தொழில்துறை, மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கு புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. இதற்குக் காரணம், தமிழகத்தின் நிதிநிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை அதிமுக-வினரே ஏற்றுக்கொண்டுள்ளனர். சுமார் மூன்றரை லட்சம் கோடி கடன் சுமை அதிகரித்துள்ளது. பொதுத்துறை கடன்களும் அதிகரித்துள்ளன. தமிழகத்தின் வருமானத்தைவிட இந்த கடன்களுக்கான வட்டிவிகிதம் அதிகமாக உள்ளது.

தமிழிசை சவுந்திரராஜன் (தமிழக பாஜக தலைவர்)

இந்த பட்ஜெட்டானது தமிழக மக்களுக்கு எந்தப் பலனையும் தராத பட்ஜெட். இதற்குமுன்பே வரியை உயர்த்திவிட்டதால், தற்போது வரியில்லாத பட்ஜெட் என்று கூறுவதில் அர்த்தமில்லை. சில நாட்களுக்கு முன்புதான் வாட் வரியை உயர்த்திவிட்டு பட்ஜெட்டில் வரியில்லை என ஏமாற்றுகின்றனர். நகர்ப்புறங்களில் குடிநீர் பிரச்னையை தீர்க்க திட்டங்கள் எதுவும் இல்லை. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக் கொண்டு எந்த ஒரு திட்டத்தையும் ஆரம்பிக்கக்கூட முடியாது.

பொன்.ராதாகிருஷ்ணன் (மத்திய அமைச்சர்)

தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பற்றாக்குறை பட்ஜெட் மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த பட்ஜெட்டில் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் என எதுவும் இல்லை.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர்)

தமிழக பட்ஜெட் முன்னேற்றத்துக்கான பட்ஜெட் இல்லை. வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பது பற்றி பட்ஜெட்டில் எந்தவித தகவலும் இல்லை.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர்)

விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாகும்? வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயம், குடிநீர், உணவு, மருத்துவம், சுகாதாரத்துக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை.

ராமதாஸ் (பாமக நிறுவனர்)

பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ.3.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. தமிழகம் கடன் வளர்ச்சியில் முதலிடம் பிடித்து, தொழில் வளர்ச்சியில் கடைசி இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Advertisements