இந்தியா: இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யபட்டுள்ள புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதற்கு எவ்வளவு செலவாகிறது என்பது குறித்த விவரத்தை நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் வெளியிட்டுள்ளார்.

நாட்டில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழித்துக்கட்டும்வகையில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகிய உயர்மதிப்பு நோட்டுகளை செல்லாதவையாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் தங்களிடமிருந்த மதிப்பிழிந்த இந்நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இவற்றுக்கு ஈடாக பணத் தட்டுப்பாட்டைக் குறைக்கும்வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு வங்கிகள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த புதிய நோட்டுகளை அச்சிடுவதற்கு ஆகும் செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால், ‘புதிய 500 ரூபாய் நோட்டை அச்சிட ரூ.2.87 முதல் ரூ.3.09 வரையில் செலவாகும். அதேபோல, 2,000 ரூபாய் நோட்டை அச்சிடுவதற்கு ரூ.3.54 முதல் ரூ.3.77 வரையிலும் செலவாகிறது. இந்த நோட்டுகளை அச்சிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்களின் தேவையை பூர்த்திசெய்யும் வரையில் இந்நோட்டுகளை அச்சிடும் பணி தொடர்ந்து நடைபெறும். எனவே, அதற்குள் இந்நோட்டுகளை அச்சிட மொத்தம் எவ்வளவு செலவாகும் என்று கூறிவிட முடியாது. டிசம்பர் மாதம் 10 தேதி நிலவரப்படி, ரூ.12.44 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியுள்ளன. மேலும் டெபாசிட் செய்யப்பட்டுள்ள நோட்டுகளில் கள்ள நோட்டுகள் உள்ளனவா, எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டன என்பது குறித்தும் கணக்கிடப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.

Advertisements