சென்னை: திருவள்ளூவர் மாவட்டத்தைச் சேர்ந்த சாலமன் என்பவர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசியவர் என்று தெரியவந்துள்ளது.

டெல்லியில் மரணமடைந்த ஜே.என்.யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல், அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அரிசிபாளையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவர் உடலுக்கு ஏரளாமனவர்கள் அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் அவரை நோக்கி காலணியை கொண்டு எறிந்தார். இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், தீவிரவாதம் வளர்ந்து வருவதாகவும், தன்னை நோக்கி காலணி வீசப்படவில்லை என்றும் வானத்தை நோக்கி வீசப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் காலணி வீசியவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்த சாலமன் என்பது தெரியவந்துள்ளது. இந்திய மக்கள் முன்னணி என்ற கட்சியில் பொறுப்பாளராக இருக்கும் சாலமன் பானு என்ற திருநங்கையைத் திருமணம் செய்து கொண்டவர்.

Advertisements