தமிழ்நாடு : இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2017-18 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால், எல்லா மாவட்டங்களையும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும், நீர் நிலைகள் தூர்வாரப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்தில் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீருக்கு அண்டை மாநிலங்களையே எதிர்பார்த்திருக்கும் நிலை தொடர்வதால், தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் நீரை சேமித்து வைக்க முடியாமல் ஒவ்வொரு வருடமும் விவசாயம் பொய்த்துப் போகிறது. மேலும் கடந்த 20 வருடங்களாக தமிழகத்தின் எந்தவொரு ஆறு, ஏரி, குளமும் முழுமையாக சரிவர தூர்வாரப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதனால் ஏரி, ஆறு மற்றும் குளங்களை தூர்வார உரிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் முறையான திட்டங்களை அமல்படுத்த வேண்டு்ம் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயக் கடன், பயிர்க் காப்பீடு, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பொருட்களின் விலை நிர்ணயம் ஆகியவை குறித்தும் விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில், கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2016-17ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிவிப்பில், கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.6000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்று அப்போதைய நிதியமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements