இந்தியா: இன்று காலை இந்திய டெஸ்ட் அணியின் இரண்டாம் நாள் ஆட்டத்தைப் பார்க்கும் ஆவலில் தூக்கத்திலிருந்து எழுந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகமான செய்தி கிடைத்திருக்கும். ஆனால் சரியான நேரத்தில் ஒலிக்கவிடப்பட்ட தீ எச்சரிக்கை அலாரத்தால் காப்பாற்றப்பட்ட பல உயிர்களில் 15 உயிர்கள் ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் டீமின் உயிர்கள். அதில் ஒருவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.

விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் செமி-ஃபைனல் வரை வந்திருக்கிறது தோனியின் டீம். பெங்கால் மாநில அணியுடன் இன்று காலை தோனியின் ஜார்கண்ட் மாநில அணி மோதும் போட்டி தொடங்கவிருந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுபவர்கள் ஞாயிறு நடைபெறும் ஃபைனலில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் தோனியின் அணியினர் டெல்லியிலுள்ள துவாரகா வெல்கம் ஹோட்டலிலிருந்து கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்தபோது, காலை 7 மணிக்கு கரும்புகையும் – எரிகிற வாசமும் வரவே எதற்கும் தயாராக இருந்திருக்கின்றனர்.

முதலில் அனைவரையும் ரூம்களை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சொல்லிவைத்திருந்த அணி ஏற்பாட்டாளர்கள் நிலைமை கைமீறிப்போகவே, தீ எச்சரிக்கை அலாரத்தை ஒலிக்கவிட்டு, படிகளின் மூலம் அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் ஹோட்டலிலிருந்து அப்புறப்படுத்தி, திட்டமிட்டபடி டெல்லியிலுள்ள பாலம் மைதானத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர். அங்கு சென்றபிறகு வீரர்களை ஆசுவாசப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் விளைவாக, இன்று நடைபெறவேண்டிய செமி-ஃபைனல் ஆட்டம், நாளை சனிக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின், வேறு ஒரு ஹோட்டலுக்கு ஜார்கண்ட் மாநில அணியினர் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர். ஜார்கண்ட் அணியினரின் கிரிக்கெட் கிட்-கள் மட்டும் தீயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisements