இந்தியா: யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்புகளை சீனா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

மிகவும் குறுகிய காலகட்டத்தில் அதீத வளர்ச்சியடைந்த நிறுவனம் பதஞ்சலி. ஷாம்பூ முதல் மைதா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வரை உற்பத்தி செய்து வருகிறது இந்நிறுவனம். இந்நிறுவனத்தின், பொருட்களுக்கு மக்களிடம் அதிகளவில் வரவேற்பு உள்ளதால், ஒவ்வொரு காலாண்டிலும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறது. ஒருபுறம் அதீத வளர்ச்சி காணப்பட்டாலும், இந்நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில், பதஞ்சலி நிறுவனம் சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் சீனா, பங்களாதேஷ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கு தங்களது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஏற்றுமதி மையத்தை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனம் முடிவுசெய்துள்ளது. மேலும் இதற்கான அனுமதி பெற இந்திய உள்நாட்டு நீர்வழிகள் அதிகாரிகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் பதஞ்சலி நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

Advertisements