சென்னை: தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்- அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். விஜயின் 61 வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் அவருடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்ய மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். கூடவே எஸ்.ஜே சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் சூட்டிங் சென்னையில் உள்ள பின்னி மில்லில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது.

விஜய் 61 படம் பற்றி தினம் ஒரு செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இப்படத்தில் விஜய் மூன்று விதமான ரோல்களில் நடிக்கிறார், படத்திற்கு ரஜினியின் பட தலைப்பான மூன்று முகம் தலைப்பை வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படக்குழு அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர், உடம்பில் ரத்த காயங்களுடன் விஜய் சேரில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரோ செல்போனில் படம்பிடித்து அதனை இணையதளத்தில் பரப்பிவிட்டனர். தற்போது மேலும் இரண்டு போட்டோக்கள் வெளியாகியுள்ளன. இதில், விஜய் நெற்றி நிறைய பட்டை பூசி, முறுக்கு மீசையுடன் கையில் ஒரு குழந்தையுடன், அருகில் நித்ய மேனன் மற்றும் எஸ் ஜே சூர்யாவுடன் இருப்பது போன்ற போட்டோக்கள், சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

விஜய் 61 படத்தில் ஆச்சர்யமான பல விஷயங்கள் உள்ளன, படக்குழு அதிகாரபூர்வமாக போட்டோக்களை வெளியிடும் வரை யாரும் இதுபோன்ற போட்டோக்களை வெளியிட வேண்டாம் என்று படக்குழு சார்பில் கேட்டு கொண்டுள்ளனர்.

Advertisements