சென்னை: விஜய்க்கு ‘பரிசுக்காரன்’ என்ற பெயர் கோலிவுட்டில் உள்ளது பலருக்கும் தெரிந்த விஷயம். சக நடிகர்களை சந்திக்கும்போதும் சரி, தனது படத்தில் உழைத்த உழைப்பாளர்கள் முதற்கொண்டு டெக்னீஷியன்ஸ் வரை அனைவருக்கும் பரிசுகளைக் கொடுத்து அசரவைக்கும் வழக்கம் கொண்டவர் விஜய். அஜித்துக்கு விஜய் கொடுத்த வாட்ச் பரிசு இன்று வரையிலும் இருதரப்பு ரசிகர்களின் நெஞ்சில் நிற்க, பைரவா வெற்றிக்கு அனைவருக்கும் விஜய் கொடுத்த பிரேஸ்லெட் சமீபத்திய நிகழ்வு. ஆனால், விஜய்யிடம் சூர்யா தரப்பிலிருந்து சமீபத்தில் ஒரு கிஃப்ட் விஜய்யை சென்றடைந்திருக்கிறது. அதன் காரணம் விஜய் ரசிகர்.

தமிழ் சினிமாவின் மூன்று முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா ஆகியோர் முறையே கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தமிழகம் தாண்டி தங்களது மார்க்கெட்டை வளர்த்து வைத்திருக்கிறார்கள். அதிலும், கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர்கள் முக்கியமானவர்கள். சொந்த மொழி திரைப்படங்களுக்கு இணையாக விஜய்யின் திரைப்படங்களை ஹிட் கொடுக்கக்கூடியவர்கள். மூன்று, பக்கத்து மாநிலங்களைப் பிரித்துக்கொண்டாலும் தங்களது எல்லைகளை விஸ்தரிப்பதில் விஜய் – சூர்யா ஆகிய இருவருக்கும் ஆர்வமுண்டு. அப்படித்தான் சூர்யாவின் சமீபத்திய திரைப்படமான சிங்கம் 3-யை கேரளாவில் புரமோட் செய்ய சூர்யா கேரளா பயணமானார்.

அப்போது சூரியாவைச் சந்தித்த விஜய்யின் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர், கிஃப்ட் ஒன்றை சூர்யாவிடம் கொடுத்து தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் விஜய் அண்ணாவிடம் இந்த கிஃப்டைக் கொடுத்துவிடுங்கள் எனக் கூறியிருக்கிறார். அந்த ரசிகனின் அன்பான கோரிக்கையை ஏற்ற சூர்யா, சமீபத்தில் தனது 2D எண்டர்டெயின்மெண்ட்ஸின் இயக்குநர் ராஜசேகர பாண்டியன் மூலம் விஜய்யிடம் அந்த கிஃப்டை சேர்த்திருக்கிறார். இந்தத் தகவலை ராஜசேகர பாண்டியன் Behindwoods இணையதளத்துக்குக் கொடுத்தப் பேட்டியில் உறுதி செய்திருக்கிறார். நான் விஜய் அவர்களின் மேனேஜருக்கு போன் செய்து தகவலைக் கூறியதும், அவர் விஜய்யுடன் மீட்டிங்கை ஏற்பாடு செய்து கொடுத்தார். விஜய் நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை சந்தித்து கிஃப்டைக் கொடுத்தேன். கிஃப்டை புன்னகையுடன் பெற்றுக்கொண்ட விஜய், சூர்யாவின் இந்த நல்ல குணத்தைப் பாராட்டியிருக்கிறார் என்று அவர் கொடுத்திருக்கும் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Advertisements