அமெரிக்கா: கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்கான திட்டங்களில் களமிறங்கியுள்ளது ஒரு சுற்றுலா நிறுவனம்.

உலகத்தின் பெரிய கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக், 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் சவுதாம்டனிலிருந்து, நியூயார்க்கிற்கு பயணித்த போது, உடைந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்து ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் அந்த கப்பலின் மீதுள்ள பிரியமும், சுவாரசியங்களும் இன்னும் குறையவில்லை. இதற்காகவே டைட்டானிக் கப்பல் கதை, திரைப்படமாக வெளிவந்து மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் ப்ளூ மார்பிள் எனும் தனியார் சுற்றுலா நிறுவனம், கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை, அருகில் சென்று சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்து வருகிறது. எட்டு நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு கட்டணம், இந்திய மதிப்பில் 65 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்.

நியூஃபவுன்லாந்து பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பறந்து அதன்பின் அந்தக் குழுவால் அமைக்கப்பட்டுள்ள பாய்மரப்படகு ஒன்றில் இறங்கி, பிறகு நீர்மூழ்கி கப்பல் மூலம் டைட்டானிக் மூழ்கியுள்ள பகுதி வரை, பயணிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கப்பலின் முக்கிய பகுதிகள் அனைத்தையும் உரிய வல்லுநர்களால் சுற்றிக் காண்பிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

கோடை விடுமுறையை டைட்டானிக்குடன் கொண்டாட, அடுத்த ஆண்டு மே மாதம் வரை காத்திருக்க வேண்டும். தற்போது ஒன்பது பயணிகளுக்காக மட்டுமே இந்த திட்டம் டைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்பின், இரண்டாவது குழுவினரை 2019 ஆம் ஆண்டு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் ப்ளூ மார்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisements