சென்னை: ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ கட்சியிலிருந்து விலகிய ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலில் நுழைந்து கடந்த மாதம் தீபா பேரவையைத் தொடங்கினார். ஆரம்பத்திலிருந்தே கட்சியின் பெயர் முதல் நிர்வாகிகள் வரை அனைத்தும் குழப்பமனதாகவே இருந்து வந்தன. இதற்கிடையில் தீபாவுக்கும் அவர் கணவர் மாதவனுக்கும் கட்சியை நிர்வகிப்பது தொடர்பாக அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. இதனால் அதிருப்தியில் இருந்த மாதவன், தன்னுடைய நண்பர்களிடம் இதுபற்றி கூறி புலம்பியுள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் “கட்சியில் தீபா தன்னிச்சையாக முடிவெடுத்து வருகிறார். எனவே, பேரவை சார்ந்த நடவடிக்கைகளில் நான் இனி தலையிட மாட்டேன். இனி, அவர் விருப்பம் போல செயல்படலாம்” என்று தெரிவித்தார். பிறகு நெடுவாசல் போராட்டத்துக்கும் தனியாக சென்று ஆதரவு கொடுத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய ஆதரவாளர்களுடன் காஞ்சிபுரம் மாவட்டம் வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் மாதவனுடைய நண்பர்களும்,ஆதரவாளர்களும், “நாம் புதிதாக கட்சி தொடங்கலாம்” என்று கூறியுள்ளனர். இதன்படி, நேற்று மாலை ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்த மாதவன், தான் புதிதாகக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த மாதவன், “தீபா தன்னிச்சையாக இயங்கவில்லை. அவரை பின்னாலிருந்து இயக்குகின்றனர். விரைவில் அந்த தீய சக்திகளை அடையாளம் காட்டுவேன். தீபா வைத்திருப்பது பேரவை மட்டுமே. நான் தொடங்கப்போவது கட்சி” என்று தெரிவித்தார். மேலும், “ஆர்.கே .நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி மக்களுடன் ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

Advertisements