சென்னை: முன்னணி நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக வலம் வரும் தனுஷ் பவர் பாண்டி படம் மூலம் இயக்குநராகியுள்ளார். இதைவிட தமிழ் சினிமாவின் வெற்றிகரமான தயாரிப்பாளாராகவும் வி்ளங்குகிறார். சினிமாவில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு படங்கள் தயாரித்து நஷ்டமடைந்த நடிகர்களின் பட்டியல் கோடம்பாக்கத்தைப் பொருத்தவரை நீளமானது.

தனுஷ் தயாரிப்பாளராக மாற முடிவெடுத்த போது இந்த விஷயங்களை அவருக்கு நெருக்கமானவர்கள் கட்டாயம் சொல்லியிருப்பார்கள். ஆனால், தனுஷ் தான் கால் பதிக்கும் துறைகளிலெல்லாம் வெற்றியடைந்து வருவது போல் தயாரிப்பாளராகவும் அதை நிரூபித்திருக்கிறார். 2011ம் ஆண்டு முதல் தன் Wunderbar நிறுவனத்தின் மூலம் படங்கள் தயாரித்து வரும் தனுஷ், எதிர்நீச்சல், நானும் ரௌடி தான், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற வெற்றிப்படங்களையும் காக்கா முட்டை, விசாரணை போன்ற விருது வென்ற படங்களையும் ஒரு சேர தயாரித்து வருகிறார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தையும் தயாரிக்கிறார்.

இந்நிலையில் மலையாள சினிமாவிலும் தயாரிப்பாளராக களம் இறங்குகிறார் தனுஷ். Wunderbar தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கும் இந்த படத்தில் டொவினோ தாமஸ் மற்றும் அறிமுக நடிகை நேகா ஐயர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தனுஷ் தயாரிக்கும் முதல் பிளாக் காமெடி வகை திரைப்படம் இதுவாகும்.