சென்னை: ‘என் தேசம் என் உரிமை’ கட்சியினர் நேற்று முன்தினம் தங்கள் வேட்பாளரை பொதுமக்கள் முன்னிலையில் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கும் புதிய முயற்சியில் இறங்கினர். அதாவது, பொது மக்கள் தரப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பேர் கொண்ட குழு பத்து கேள்விகளைப் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் கேட்டது. இந்தக் கேள்விகளுக்கு வேட்பாளர்கள் அளிக்கும் பதிலை அடிப்படையாக வைத்து ஆர்.கே. நகர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சியினர் கூறியிருந்தனர். அந்த வகையில் என் தேசம் என் உரிமை கட்சியின் சார்பாக ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக ஜெ.ஜெயந்தி சந்திரன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் M.A பட்டதாரி (Public administration & diploma in public relations). ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்தவர். இந்த பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கு இலவசமாக கல்வி கற்றுக்கொடுக்கும் பொது நலப்பணியில் ஈடுபட்டுவருகிறார்.

‘நம் முதல் தேர்வின் முடிவு மிகவும் சிறப்பானது. தொலைநோக்கு பார்வை கொண்ட பெண். துணிச்சல் மிக்க பெண். அதே தொகுதியில் வாழும் பெண். குப்பை ஏன் தனி மனிதன் அள்ள வேண்டும் என்று கேட்ட பெண். இனி யாரும் குப்பை அள்ளக்கூடாது என்றும் துப்புரவுத் தொழில் செய்வோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த என்னும் பெண். ராயபுரம் தொகுதி பையனும் ஐ.ஐ.டி-யில் படிக்க வேண்டும் என்று ஆசை கொண்ட பெண். நம் பூமி நாசமாக நாம் விடக்கூடாது என்று பற்று உள்ள சகோதரி’ என்று தங்கள் வேட்பாளர் குறித்து என் தேசம் என் உரிமை கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். இந்நிலையில் நாம், என் தேசம் என் உரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் அவர்களை தொடர்புகொண்டு வேட்பாளர் தேர்வு குறித்து கேட்டோம். அதற்கு அவர், “எங்கள் வேட்பாளர் சமூக அக்கறையும், பொறுப்புணர்ச்சியும் மிக்கவர். பெற்றோரால் கைவிடப்பட்டு குற்றப்பின்னணி உடைய மாணவர்களுக்குத் துணிச்சலாகக் கல்வியை போதிக்கும் உன்னதமான பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ஆர்.கே.நகர் தொகுதியில் வசிப்பவர். இவருக்கு இந்தத் தொகுதியின் தேவைகள் என்ன என்பது நன்றாகத் தெரியும். இங்கு வாழும் மக்களின் சிரமங்கள் இவருக்குத் புரியும். எனவே, எங்கள் வேட்பாளர் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று இந்தத் தொகுதி மக்களின் துயர் துடைப்பார்”என்று நம்பிக்கையுடன் கூறினார்.

Advertisements