சென்னை: நடிகர் கமல்ஹாசனின் சகோதரரான சந்திரஹாசன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

நடிகர் கமல்ஹாசனுக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரண்டு அண்ணன்கள். இதில் சாருஹாசன் திரைப்படங்களில் நடித்துவருகிறார். சந்திரஹாசன், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைக் கவனித்துவந்தார்.

கடந்த ஜனவரி மாதம் சந்திரஹாசனின் மனைவி கீதமணி உயிரிழந்தார். இதையடுத்து தனியாக வசிக்கப் பிடிக்காமல் லண்டனில் வசிக்கும் மகள் அனுஹாசனின் வீட்டுக்குச் சென்று அவரோடு வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சந்திரஹாசனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். மறைந்த சந்திரஹாசனுக்கு அனுஹாசன், நிர்மல் ஹாசன் என்ற இரண்டு பிள்ளைகள். அனுஹாசன் நடிகை. நிர்மல் ஹாசன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தந்தையின் மரணத்தை அடுத்து நிர்மல் ஹாசன் அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு விரைந்துள்ளார். சந்திரஹாசன் மரணத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisements