சென்னை: சென்னையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கியிருந்தாலும், அடுத்த மாதம் சென்னை மக்களுக்கு வினியோகம் செய்வது ஆர்.கே.நகர் இடைதேர்தலால் தள்ளிபோகிறது. தேர்தல் முடிந்தவுடன் மட்டுமே ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்.

தமிழக அரசு ரேஷன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.ரேஷன் கார்டுக்கு பதிலாக, ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ வழங்குவதற்கான பணிகள் 320 கோடி ரூபாய் செலவில் நடைப்பெற்று வருவதாக கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்தது. அதன் படி, மக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான மக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காததால், ரேஷன் கார்டுகளில் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்டி வழங்கப்பட்டது.

தற்போது, பெரும்பாலான மக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதால் ‘ஸ்மார்ட்’ கார்டுகள் அச்சிடும் பணி சென்னையில் தொடங்கியுள்ளது.

இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை உயரதிகாரி, ‘ இதுவரை 1.40 கோடி ரேஷன் கார்டுதாரர்கள், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரமும் பதிவு செய்துள்ளனர். தினமும் 10 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்படுகிறது. இந்த பணி வரும் 28ஆம் தேதி முடிவடையும். அச்சிடப்பட்ட கார்டுகள் 29, 30ஆம் தேதிகளில், சென்னை தவிர்த்து, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். அங்கிருந்து, 31ஆம் தேதி சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்.அதைத் தொடர்ந்து, ஏப்ரம் 1ல், ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்கள் வரவழைக்கப்பட்டு, புது கார்டுகள் வழங்கப்படும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. சென்னையில் மட்டும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்ததும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வினியோகம் தொடங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

‘பான் கார்டு’ வடிவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு இருக்கும். அரசு முத்திரையுடன், ‘உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை’ என அச்சிடப்பட்டிருக்கும். அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும். பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் ‘கியூ.ஆர்.,’ என்ற ரகசிய குறியீடு இருக்கும். கார்டின் கீழ் பகுதியில், ‘இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது’ என எழுதப்பட்டிருக்கும்.ரேஷன் கார்டுதாரரின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து, முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதவை என ரேஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளன. மொத்தமுள்ள 1.90 கோடி கார்டுகளில், 38 % முன்னுரிமை கார்டுகள் 62% முன்னுரிமை அல்லாதவை.

முன்னுரிமை கார்டில் குடும்ப தலைவராக பெண் படம் இடம்பெறும். மற்ற கார்டில், ஆண் படம் இடம் பெறும். அரிசி கார்டுதாரர்களில் சிலர் முன்னுரிமை அல்லாத பிரிவில் இருந்தாலும் வழக்கம் போல் ரேஷனில் அனைத்து பொருட்களும் வழங்கப்படும். மொத்தமாக ஐந்து வகைகளில் இருக்கும் ரேஷன் கார்டுகள் இருக்கும். அதன்படி, கார்டில் புகைப்படம் அருகில், ‘பி.எச்.எச்., – ரைஸ்’ என்றிருந்தால், அனைத்து பொருட்களும் வழங்கப்படும். ‘பி.எச்.எச்., – ஏ’ என்றிருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். என்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும். ‘என்.பி.எச்.எச்., – எஸ்’ என்றிருந்தால் சர்க்கரை மட்டும் வழங்கப்படும். ‘என்.பி.எச்.எச்., – என்.சி., என்றிருந்தால் எந்த பொருட்களும் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements